top of page
Search

காரைக்குடி பற்றிய சிறு கவிதை!



பூம்புகார் வீட்டு நகரத்தார்

புகுந்து வளர்த்த காரணத்தால்

சோம்பல் முறித்த காரைக்குடி.

சொகுசை அறிந்த காரைக்குடி.


கொப்புடை அம்மன் அருள்கிடைக்கும்

குன்றக்குடியோ துயர் துடைக்கும்

பிள்ளை யார்பட்டி வேரைப்பிடி

பெருநகர் எங்கள் காரைக்குடி.


கோட்டை அரண்மனை வீடுகளாம்

குணங்கள் மாறா நாகரிகம்

நாட்டும் முன்னே: கூரைக்குடி

நகரத் தாரால் காரைக்குடி.


வம்பை அறியா நகரத்தார்

வாங்க! என்று வரவேற்க

செம்பை ஊற்று நீரைக்குடி

சிறந்தது அதனால் காரைக்குடி.



வள்ளல்! பெருமான் அழகப்பர்

வாழ நினைத்த காரணத்தால்,

பள்ளி, கல்லூரி வாசற்படி

பரந்து விரிந்த காரைக்குடி.


சிக்ரி என்னும் வேதியியல்

செயல்படும் ஆய்வு மையத்துடன்

மக்களை காக்கும் முத்துமாரி

மையம் கொண்ட காரைக்குடி


சட்டை போடா ஒருமனிதன்

சட்டை செய்த காரணத்தால்

கட்டித் தமிழின் கம்பன்குடி

கவிதை மணக்கும் காரைக்குடி.


கம்பன் கழகம் முதலாக

கலைஞர் கழகம் ஈறாக

தெம்பாய் வளர்ந்த கழகக்குடி

செந்தமிழ் மணக்கும் காரைக்குடி.


தமிழ்க்கடல் என்னும் ராய.சொ.

தளரா நெஞ்சன் முருகப்பா,

நிமிர்ந்த விடுதலை வீரக்குடி

நினைவில் நிற்கும் காரைக்குடி.


சிறுகூடல் பட்டி பிறந்தாலும்

சினிமா உலகில் சிறந்தாலும்

அருமைக் கவிஞன் வளர்ந்தகுடி


அதுதான் எங்கள் காரைக்குடி.


சினிமா உலகில் பலபேர்கள்

சீர்திருத்தத்தில் பல பேர்கள்

தனியாய் விதைகள் முளைத்தபடி

தகுதி உயர்ந்த காரைக்குடி.


கல்வி-கேள்வியில் சிறந்த குடி

கண்ணியர் நிறையப் பிறந்த்குடி-நகர்ப்

புள்ளிகள் கோலமாய் ஆனகுடி

புகழில் மிதக்கும் காரைக்குடி.


கடைகள் நிறைந்த கல்லுக்கட்டி

கார்கள் வண்டிகள் மல்லுக்கட்டி

தடைகள் தானாய் நெருக்குங்குடி

தடையின்றிப் பொருட்கள் இருக்குங்குடி


மழைநீர் வந்தால் நீரோட்டம்

மற்ற நாளெல்லாம் தேரோட்டம்

பழனிக்குக் காவடி நடந்தபடி

பக்தியில் நனைந்த காரைக்குடி.


தஞ்சாவூரின் இலை போட்டு

இலையில் நிறையக் கறிகூட்டு

கெஞ்சிக் கெஞ்சி உபசரிக்கும்

கீர்த்தி மிகுந்த காரைக்குடி.


பலகாரங்கள் பல வாகும்

பனியாரங்கள் சில வாகும்

உலகைச் சோற்றால் பிடித்தவர்கள்

ஊர்தான் பேர்தான் காரைக்குடி.


சூரிய சந்திர ஒளிவீச்சு

சுடரை வெல்லும் வைரங்கள்

நேரிய பித்தளை எவர்சில்வர்

நிறைய விற்கும் காரைக்குடி.


கட்டிடம் நிறையக் கட்டுங்குடி

காசுள் ளோர்க்கே எட்டுங்குடி

வெற்றிடம் கோடியாய் விற்குங்குடி

விலைகள் உயர்ந்த காரைக்குடி.


பருமாத் தேக்கு சிற்பங்கள்

பள பளப்பான வீடுகளை

வரு மானத்தால் விற்றுவிட

வணிகர்கள் ஓங்கிய காரைக்குடி.


பழைய சாமான் வணிகர்களும்

பரந்த மனைஇடத் தரகர்களும்

வளைய வந்து வென்றகுடி

வசதி பெருக்கிய காரைக்குடி.


சிந்து வெளியின் நாகரிகம்

சென்று மறைந்த பின்னாலே

வந்த நகர நாகரிகம்

வளர்த்த தெங்கள் காரைக்குடி.


எழுதியவர் : கனவுதாசன்

 
 
 

Comments


bottom of page